இந்திய கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமான ஆண்டு என்றால் அது 1983ஆம் ஆண்டு தான். அந்த ஆண்டு தான் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. அந்த நாளுக்கு பிறகு கிரிக்கெட் உலகில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. மேலும் பல சிறுவர்களை கிரிக்கெட் விளையாட்டின் பக்கம் அழைத்ததும் அந்த வெற்றி தான். 


1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜூன் மாதம் 9ஆம் தேதி முதல் 3ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்று இருந்தது. முதல் இரண்டு உலகக் கோப்பையிலும் குரூப் போட்டிகளிலேயே வெளியேறிய இந்திய அணிக்கு மூன்றாவது உலகக் கோப்பை சவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியே நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இருந்தது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் போட்டியிலேயே நடப்புச் சாம்பியனை தோற்கடித்து இந்திய அணி அசத்தியது. 


கபில்தேவ் 175:




குரூப் போட்டியில் அதன்பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு வெற்றி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு தோல்வி மற்றும் வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியா-ஜிம்பாவே அணிகளிடையே ஜூன் 18ஆம் தேதி குரூப் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் ஆடிய இந்திய அணியில் 17 ரன்கள் எடுப்பதற்கு சுனில் கவாஸ்கர், ஶ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தவித்து கொண்டிருந்தது. அப்போது கேப்டன் கபில்தேவ் களமிறங்கி இந்திய அணியை தனி நபராக மீட்டார். 138 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் விளாசி 175 ரன்கள் எடுத்து இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தார். இந்தப் போட்டி இங்கு நிலவிய ஒளிபரப்பு பிரச்னை காரணமாக இப்போடி தொலைக்காட்சியில் வரவில்லை. கபில்தேவின் அந்த இன்னிங்ஸை ரசிகர்கள் பார்க்கமுடியாமல் போனது இன்று வரை பெரிய வருத்தமாக உள்ளது.


அரையிறுதிப் போட்டி:




முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் மோகிந்தர் அமர்நாத் பந்துவீச்சில் 2 விக்கெட்டும் பேட்டிங்கில் 46 ரன்கள் விளாசியும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்கியது. 


'தோஸ்த் படா தோஸ்த்'- கோலி - வில்லியம்சன் நட்பும் கிரிக்கெட்டும் !


இறுதிப் போட்டி:


1975,1979 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்கியது. இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 25 1983ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஶ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார்.


கோப்பையை பெற காரணமாக அமைந்த கபில் தேவ்வின் கேட்ச்: 


இதனையடுத்து 184 ரன்கள் என்ற எளிய இலக்கை நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் விரைவில் எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வெஸ்ட் இன்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய பந்துவீச்சை பவுண்டரிகளாக அடித்தனர். குறிப்பாக விவியன் ரிச்சர்ட்ஸ் 7 பவுண்டரிகள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மதன் லால் வீசிய பந்தை ரிச்சர்ட்ஸ் வானத்தை நோக்கி அடித்தார். மிட் விக்கெட் திசையில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்த கபில் தேவ் பின் நோக்கி ஓடி அந்தப் பந்தை லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச் தான் இந்திய அணி கோப்பையை பெற முக்கியமான ஒன்றாக அமைந்தது.


 



அதன்பின்னர் 52 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஜர் பின்னி பெற்றார். இவர் 18 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். மொதத்தில் இந்திய அணி கிரிக்கெட் உலகில் வெளிச்சம் பெற்ற நாள் அந்த நாளாக அமைந்தது. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ‘கபில்ஸ் டேவில்ஸ்’ என்று போற்றப்படும் அந்த அணி கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்த நாள் இன்று. 


மேலும் படிக்க: சச்சினே டென்ஷன் ஆகிட்டாரு.... ‛நியூசிலாந்து சூப்பர்.... இந்தியா....?’ ட்விட்டரில் அதிருப்தி!