பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் முடிவுகளில் ரிபுசுதன் பிரசாத் என்பவரின் மகன் ரிஷிகேஷ் குமார் மதிப்பெண் சான்றிதழில் இந்த குளறுபடி நடந்துள்ளது. வெளியான அந்த மதிப்பெண் பட்டியலில் ரிஷிகேஷ் குமார் குறித்த தகவல்கள் எல்லாம் முழுமையாக உள்ள நிலையில் ரிஷிகேஷ் குமார் புகைப்படத்திற்கு பதிலாக பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 






பீகாரில் இதேபோல் மாநில பொது சுகாதார பொறியியல் துறை ஜூனியர் பொறியாளர் தேர்வின் முடிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் பிரபல நடிகை சன்னி லியோன் 98.5 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், முசாபர்பூரின் பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் பி.ஏ பகுதி 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர் ஒருவருக்கு வழங்கிய சான்றிதழில், அந்த தேர்வரின் தந்தை பெயர் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி என்றும் தாய் நடிகை சன்னி லியோன் என்றும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.


இந்நிலையில் பீகாரில் STETன் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பல மாணவர்கள் அந்த வாரியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். STET வெளியிட்ட இந்த ஆசிரியர் தகுதி தேர்வுகள் முடிவில் பிரபல நடிகை அனுபமா பர்மேஸ்வரன் கணிதம் தாள் 1ல் 150 மதிப்பெண்ணுக்கு 77.7 மதிப்பெண்ணும் கணிதம் தாள் 2ல் 95.4 மதிப்பெண் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அரசு தேர்வுகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பது மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் அந்த துறை சார்ந்த நம்பிக்கையை குறைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த குளறுபடி குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக கல்வி முதன்மை செயலர் சஞ்சய் குமார் தெரிவித்தார். மேலும் பி.எஸ்.இ.பி. தான் இந்த ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்தியது என்றும். எனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஞ்சய் குமார் கூறினார்.