”ஒரே டெஸ்ட் போட்டி முடிவால் டெஸ்ட் கிரிக்கெட் உலகின் சாம்பியன் அணியை தேர்வு செய்வதை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை. இறுதி போட்டிக்கு தேர்வாகும் இரண்டு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகளை வைத்து வெற்றியாளரை முடிவு செய்ய வேண்டும்” – கேப்டன் கோலி!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கு பிறகு கேப்டன் கோலி கூறியவை.
2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அறிமுக போட்டி முதல், சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து கொண்டு, இந்திய கேப்டனாக எழுச்சி கண்டு அணியை வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார் கோலி. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகளோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியை முதல் இடத்தில் தக்க வைத்துள்ளார் கேப்டன் கோலி. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி அல்டிமேட் டெஸ்ட்’ போட்டி என அழைக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது மூலம், கேப்டன் கோலி பதவி விலக வேண்டுமென்ற கருத்து வலு பெற்று வருகின்றது.
புள்ளிவிவரமா? ஐசிசி கோப்பையா?
ஆனால், புள்ளிவிவரமா? ஐசிசி கோப்பையா? என ஒப்பிடும்போது வெற்றிகளும், கோப்பைகளுமே பெரும்பாலான நேரங்களில் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில்தான், நேற்றையை போட்டியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டுமென எனவும், ரோஹித் அல்லது இப்போது துணை கேப்டனாக இருக்கும் ரஹானேவுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பதவி தர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில், கேப்டன் கோலியின் ரெக்கார்டுகள் சொல்வதென்ன, கோலி பதவி விலகுவதால் ரோஹித் அல்லது ரஹானாவுக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் தகுதி உள்ளதா என்பதை பார்ப்போம்.
கேப்டன் கோலி ரெக்கார்டு
2014ஆம் ஆண்டு விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை பெற்றார். விராட் கோலி 61 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக செயல்பட்டு 36 வெற்றி, 15 தோல்வி மற்றும் 10 டிரா செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் கோலியின் வெற்றி சதவிகிதம் – 59!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்கள் இடத்திலேயே அவர்களை வென்றது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ‘அவே சீரிஸ்’ வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி கேட்பன் என ரெக்கார்டுகள் இருந்தும் கோலியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று தர முடியவில்லை.
கேப்டன் கோலி, முக்கிய போட்டிகளில் தவறான முடிவுகளை எடுப்பதுதான் இதற்கு மிக முக்கிய காரணம். ஒரு வேளை இந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், இந்த கேள்விகள் எழுப்பப்பட்டிருக்குமா என்றால் நிச்சயம் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக யார் இருக்க வேண்டும் என்ற விவாதம் இந்திய அணியின் எதிர்காலத்தை பற்றியதாக மட்டுமின்றி, ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான கோலியை பற்றியதாகவும்தான் அந்த விவாதம் இருந்திருக்கும். அதனால், நேற்றைய போட்டியில் வெற்றியோ தோல்வியோ, தொடர்ந்து முக்கிய போட்டிகளில் கேப்டன் கோலி எடுக்கும் முடிவுகள் சொதப்புவதாலும், கோப்பை கனவை நிறைவேற்ற முடியாததாலும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் யார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
கேப்டன் கோலி vs பேட்ஸ்மேன் கோலி
அடுத்தடுத்து லிமிடட் ஓவர் கிரிக்கெட் தொடர்களை இந்தியா சந்திக்க இருப்பதால், பேட்டிங்கில் கோலி கவனம் செலுத்தினால் இன்னும் பல பேட்டிங் ரெக்கார்டுகளை தகர்த்து தன்வசப்படுத்துவார். ஆனால், இதே நிலையைதான் ரோஹித் ஷர்மாவும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடியாத ரோஹித்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை கொடுத்து லிமிடட் ஓவர் பேட்டிங் ஃபர்பாமென்ஸிற்கும் அழுத்தம் தராமல் இருப்பதே இந்திய அணிக்கு நல்லது.
அடுத்த ஆப்ஷன், ரஹானே! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ரஹானாதான் என்றாலும், கடைசியாக நடைபெற்ற இறுதிப்போட்டியிலேயே முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஷாட் அடித்து அவுட்டாகினார். தொடந்து முக்கியமான போட்டிகள், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி வரும் ரஹானேவால் கேப்டன் பொறுப்பில் ‘consistent’ஆக வழிநடத்தி செல்ல முடியுமா என்பதை இப்போதே யூகிக்க முடியாது.
இப்படி இந்திய அணி கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் சிக்கல் நீடிப்பதால், இப்போதைக்கு கோலியே தொடர்ந்து அணியை வழி நடத்தலாம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொள்ள அவரது பாணியில் இந்திய அணியை தயார்ப்படுத்தி வைத்திருக்கும் கோலி, முக்கியமான போட்டிகளின்போது சில தவறுகளை அவர் தவிர்த்தாலே இந்திய அணி சுதாரித்துவிடும் என நம்புவோம்.