கோவையில் 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் ஓவியம் வரைந்த மாணவி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா ரவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மோனிஷா ரவி சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதன் காரணமாக பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை குவித்துள்ளார். அதேபோல ஓவியத்தில் பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினம் அன்று தனியார் கல்லூரியில் நடைபெற்ற உலகச் சாதனைப் போட்டியில் பங்கு பெற்றார். இதில் தனி நபராக 13 மணி நேரத்தில் 6057.92 சதுர அடி அளவில் தொடர்ந்து ஓவியம் வரைந்தார்.
இந்த பிரம்மாண்ட ஓவியம் மூலம் மோனிஷா ரவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதற்கான சான்றிதழ் மோனிஷா ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 12 மணி நேரத்தில் சுமார் 5000 சதுர அடி அளவில் தொடர் ஓவியம் வரைந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் தொடர் ஓவியத்தை மோனிஷா ரவி உருவாக்கி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறித்து மோனிஷா ரவி கூறுகையில், "எனக்கு சிறு வயதில் இருந்தே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. ஓவியக் கலையில் புது முயற்சிகளை செய்ய முடிவெடுத்தேன். அந்த நோக்கத்தில் முட்டை ஓடுகளில் 50 தலைவர்களின் ஓவியங்களை 1 மணி நேரம் 31 நிமிடங்களில் வரைந்தேன். அதன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றேன். ஆனாலும் எனக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற பெரிய ஆசை இருந்தது. அதற்காக கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று 6057.92 சதுர அடி அளவில் 13 மணி நேரத்தில் டூடில் ஆர்ட் எனும் ஓவியம் வரைந்தேன்.
இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 13 மணிநேரம் ஓவியம் வரைந்தேன். அதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன். முதல் முறையாக இந்தியாவில் இருந்து இந்த சாதனையை அடைந்துள்ளேன். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மோனிஷா ரவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.