ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக மூன்று முக்கிய நிகழ்வுகள் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சூர்யகிரண் அக்ரோபாட்டிக் குழுவினரின்  விமான சாகசம், உலகக் கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களும் கெளரவிப்பு, உலகக் கோப்பை வென்ற கேப்டன்களுக்கு பிசிசிஐ அதிகாரிகள் சிறப்பு பிளேஸரை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.


ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில், முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.


அதேபோல், நேற்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி.


முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி. இச்சூழலில் தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்கும் நோக்கில் இந்திய அணி களம் காண உள்ளது.


நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.


விமானப்படை சாகசம்:


இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுவதால் அதை காண்பதற்கு மைதனாத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனால் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ’சூர்யகிரண் அக்ரோபாட்டிக் குழு’  இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்த உள்ளது. அதன்படி, போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.


சிறப்பு பிளேஸரை அளிக்கும் பிசிசிஐ அதிகாரிகள்:


இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றிய பத்து கேப்டன்களுக்கும் பிசிசிஐ Board of Control for Cricket in India (BCCI) அதிகாரிகள் சிறப்பு பிளேஸரை அளிக்கின்றனர்.  


கேப்டன்கள் கௌரவிப்பு:


கடந்த 1975 மற்றும் 1979  ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சர் கிளைவ் லாயிட், 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆலன் பார்டர், 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான்  1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்க, 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தங்கள் வசபடுத்திய ஸ்டீவ் வாஹ் மற்றும் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிப் பாண்டிங் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, 2015 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்   2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மோர்கன் ஆகிய உலக்க கோப்பையை வென்ற கேப்டன்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.


மேலும் படிக்க: IND vs AUS Final Weather: உலகக்கோப்பை இறுதிப் போட்டி; ரிசர்வ் டேவிற்கு வாய்ப்பு இருக்கா? வானிலை நிலவரம் சொல்வது என்ன?


மேலும் படிக்க: IND vs AUS Final 2023: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி... ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய காத்திருக்கும் விமானப்படை!