13வது உலகக்கோப்பைக்கு 10 அணிகளின் பலப்பரீட்சை தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா அஸ்திரேலியா அணிகள் வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால்  போட்டி ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டு அடுத்த நாள் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி தெரிவித்திருந்தது. இதனால் போட்டி நடைபெறும் தினத்தில் மழை பெய்யுமா என்ற கேள்வி இணையத்தை உலுக்கி வருகின்றது. இதற்கிடையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி நடக்கும் தினத்தின் வானிலை குறித்து ஆங்கில ஊடகங்கள் போட்டியின் முதல் பாதியின் போதான வானிலை நிலவரம் இரண்டாம் பாதியின் போதான வானிலை நிலவரம் என செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 

 

அகமதாபாத் வானிலை முன்னறிவிப்பு - அக்டோபர் 19, 2023

 

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் ஆட்டம் தொடங்கும் போது 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் கூடிய வானிலை இருக்கும் எனவும்,  காற்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 7 கிமீ வேகத்தில் வீசும் எனவும் காற்றின் ஈரப்பதம் 39% அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

 

காற்றின் வேகம் மணிக்கு 19 கிமீ வேகத்திலும், பனி புள்ளி 16° ஆகவும் இருக்கும். விளையாட்டின் போது முற்றிலும் மேக மூட்டம் இருக்காது, மழைப்பொழிவுக்கான வாய்ப்பே இல்லை, இதனால் ஆட்டத்தின் முதல் பாதி பாதிப்படைவதற்கு வாய்ப்புகளே இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 

 

அதேபோல் இரண்டாம் பாதி ஆட்டத்தின் போதும் வானிலை சீராகிவிடும் அதாவது,  வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை குறையும் மற்றும் காற்று அதே வேகத்தில் தென்மேற்கு நோக்கி வீசும் எனவும் தெரிவித்துள்ளனர். காற்றின் ஈரப்பதம் கணிசமாக உயரம் அதாவது 58% ஆக அதிகரிக்கும் எனவும், அதேசமயம் பனி புள்ளி 17° இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் இரண்டாம் பாதியின் போதும், மேக மூட்டம் எதுவும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இறுதிப் போட்டிக்காக ஐசிசி, பிசிசிஐ மற்றும் இறுதிப்போடியில் களமிறங்கவுள்ள இரு அணிகளும் மும்மரமாக தயாராகி வரும் நிலையில் ரசிகர்களும் தங்களது அணிகளை உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்து அகமதாபாத் வரும் ரசிகர்களுக்கு போட்டி நடைபெறும் தினத்திலான வானிலை நிலவரம் தொடர்பான செய்திகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி இதுவரை இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதேபோல் 8வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பையில் தங்கள்து முதல் போட்டியில் மோதிக்கொண்டன. அதேபோல் இறுதிப் போட்டியிலும் மோதவுள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அகமதாபாத் மைதானத்தில் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணியை பாண்டிங் தலைமையில் ஹாட்ரிக் கோப்பை வெல்வதற்கு முட்டுக்கட்டை போட்டதுடன், தொடர்ந்து உலகக் கோப்பையை வென்று வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.