கொல்கத்தாவில் வியாழன் அன்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2023 ICC ODI உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் இலக்கை 16 பந்துகள் மீதமிருக்க, 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்கையில் வெற்றிகரமாக எட்டி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் தற்போது இணையத்தில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மிட்ஷெல் மார்ஷ் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது, கடந்த ஐபிஎல் தொடரின்போது மார்ஷ் அளித்த பேட்டி ஒன்றில் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என கூறியுள்ளார். மேலும் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதியான அணிகள் என்றும், இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 10 போட்டிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றும் கூறியுள்ளார். இதோடு அந்த பேட்டியில் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்கள் குவிக்கும் என்றும், இலக்கை துரத்த முடியாமல் இந்தியா 65 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகும் என்றும், ஆஸ்திரேலியா 6வது கோப்பையை தனதாக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் இணைய வாசிகளால் பகிரப்பட்டு வருகின்றது. இத்துடன் நடப்பு உலகக்கோப்பையில் மார்ஷ் கூறியதைப் போல் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டது. ஆனால் மார்ஷ் கூறியதில் ஒரு விஷயம் தலைகீழாக உள்ளது. அதாவது ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வரும் என்றார். ஆனால் இந்தியாதான் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா லோக் சுற்றில் இரண்டு போட்டிகள் தோல்வியைச் சந்தித்த பின்னர்தான் வெற்றிக் கணக்கையே தொடங்கியது.
இதனை காரணம் காட்டி, மார்ஷ் பேசியதை இணையத்தில் வைரலாக்கும் இணைய வாசிகள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்கள் குவிக்கும் எனவும், ஆஸ்திரேலியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் என்றும் கூறிவருகின்றனர்.
இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பையில் தங்கள்து முதல் போட்டியில் சென்னையில் மோதிக்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் ஒரே அணியை எதிர்த்து விளையாடுகின்றன.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார்.
ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்