ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 19) ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இறுதிப் போட்டி:
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில், முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
அதேபோல், நேற்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி. இச்சூழலில் தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்கும் நோக்கில் இந்திய அணி களம் காண உள்ளது. இதனால், உலகக் கோப்பையை இந்திய அணி எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இதுவரை கபில் தேவ், எம்.எஸ்.தோனி உட்பட உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் நேரில் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
விமானப்படை சாகசம்:
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி உலககின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதால், அதை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகச்சி நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும். ’சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு’ தான் இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்த உள்ளது. அதன்படி, போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். மேலும், இதற்கான ஒத்திகை இன்று (நவம்பர் 17) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:IND vs AUS Final 2023: உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!