டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் 54 வீரர் வீராங்கனைகளை பங்கேற்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஏந்திச் செல்ல உள்ளார். 


இம்முறை பாராலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய இரண்டு விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பாரா பேட்மிண்டன் 6 பிரிவுகளில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா சார்பில் 4 பிரிவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக இந்தியா சார்பில் 7 பங்கேற்க உள்ளனர். அதில் எஸ்.எல் 4 (SL-4) பிரிவு பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் சுஹாஸ் யெத்தி ராஜ் பங்கேற்க உள்ளார். இவருடம் விளையாட்டு தவிர மற்றொரு சிறப்பான விஷயம் ஒன்று உள்ளது? அது என்ன? அவர் எப்படி பாரா பேட்மிண்டனில் நுழைந்தார்?




கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் 1983ஆம் ஆண்டு பிறந்தவர் சுஹாஸ் யெத்திராஜ். இவர் பிறக்கும் போது இவருடைய ஒரு காலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. உடல் அளவில் பாதிப்பு இருந்தாலும் அது அவரின் மனதை பாதிக்கவில்லை. இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரி என்பதால் அவருக்கு நல்ல ஊக்கம் அளித்துள்ளார். இவர் சிறுவயது முதல் நன்றாக படித்து வந்தார். இதனால் அவர் படித்து மருத்துவர் ஆவார் என்று அவருடைய குடும்பம் எதிர்பார்த்தது. ஆனால் அவர் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் வாங்கினார். 


ஐஏஎஸ் தேர்வில் வெற்றி:


அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தன்னுடைய சிறுவயது கனவான மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை துரத்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகினார். 2007ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் வெற்றி பெற்றார். அத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக தன்னுடைய பணியை தொடங்கினார். முதலில் ஆக்ராவில் தன்னுடைய சார் ஆட்சியர் பணியை தொடங்கினார். அதன்பின்னர் பிராயக்ராஜ் (அலாகாபாத்)மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். தற்போது உத்தரப்பிரதேசத்தின் கவுதம்புத்தாநகர் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் பணிப்புரிந்து வருகிறார்.


பாரா பேட்மிண்டன் பிரவேசம்:


ஐஏஎஸ் தேர்விற்கு படித்து கொண்டிருக்கும் போது இவருக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. குறிப்பாக பேட்மிண்டன் விளையாட்டில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஐஏஎஸ் பதவி பெற்ற பிறகு பாரா பேட்மிண்டன் விளையாட்டை தன்னுடைய ஓய்வு நேரத்தில் கற்க தொடங்கினார். பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். அப்போது இந்தியா சார்பில் ஒரு சர்வதேச விளையாட்டில் போட்டியில் பங்கேற்ற முதல் ஐஏஎஸ் என்ற சாதனையை படைத்தார். 




2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிரிவில் இவர் தங்கம் வென்றார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் அதே ஆண்டில் ஆசிய பாரா போட்டிகளில் வெண்கலம் வென்றார். தன்னுடைய பேட்மிண்டன் பயிற்சி எப்போதும் ஐஏஎஸ் பணியில் இடையூறு செய்யாமல் அவர் பார்த்து கொண்டார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் அவர் சிறப்பான பணியை மேற்கொண்டார்.


2016ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து யாஷ் பாரதி விருதை பெற்றார். அங்கு பல்வேறு மொபைல் செயலிகளையும் அவர் உருவாக்கி அசத்தினார். குறிப்பாக வாக்களார்களுக்கு தேவையான மொபைல் செயலி, குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பாக அறிந்து கொள்ள ஒரு மொபைல் செயலி எனப் பல தொழில்நுட்ப செயலிகளை உருவாக்கினார். அவர் படித்த கணினி அறிவியல் பொறியியல் பட்டம் அதற்கு உறுதுணையாக இருந்தது. கொரோனா பாதிப்பின் போது உத்தரப்பிரதேசத்தில் பணிப்புரிந்த சிறப்பான அதிகாரிகளில் இவரும் ஒருவராக இருந்தார்.




தற்போது அவருடைய பாரா பேட்மிண்டன் பிரிவில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் சுஹாஸ் யெத்திராஜ் உள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள சுஹாஸ் யெத்திராஜ் அதில் பதக்கம் வெல்வதையே குறிக்கோளாக வைத்துள்ளார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒலிம்பிக் பதக்கம் வென்று நம்முடயை நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:உடல் குறையல்ல மெடல் தான் இலக்கு... இந்திய பாராலிம்பிக் படை ரெடி!