குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்?


ஐபிஎல் சீசன் 17ல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடர் ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 10 அணிகளுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸை விட்டு வெளியேறி இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.


அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கும் அந்த பொறுப்பில் இருந்து வெளியேறினார். இச்சூழலில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஆகியோர் ஐபிஎல் 2025-க்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதானி குழுமம் ஜிடியில் பங்குகளை வாங்கலாம்:


ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன்பு அதானி குழுமம் குஜராத் டைட்டன்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று கூறப்படுகிறது. குஜராத் அணிக்குள் பல முக்கிய மாற்றங்களுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.


யுவராஜ் சிங் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எந்த அணியுடனும் தொடர்பு கொள்ளாததால், அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மாற்றுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் கடைசியாக ஐபிஎல் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!


மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன்!