மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி வலுவான நிலையில் இருந்த இந்தியா நேற்று நேபாள அணியுடன் மோதியது.


அதிரடி காட்டிய ஷபாலி:


ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்மிரிதி மந்தனா அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தை ஷபாலி வர்மாவும், ஹேமலதாவும் தொடங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே ஹேமலதா நிதானமாக ஆட ஷபாலி வர்மா அதிரடி காட்டினார்.


பவுண்டரிகளாக ஷபாலி வர்மா விளாச ஹேமலதா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இதனால், இந்திய அணி எந்த சிரமும் இல்லாமல் 100 ரன்களை கடந்தது. அதிரடி காட்டிய ஷபாலி வர்மா அபாரமாக அரைசதம் கடந்தார். நிதானமாக ஆடிய ஹேமலதா 42 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசிய ஷபாலி வர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 81 ரன்களுக்கு அவுட்டானார். கடைசியில் ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 5 பவுண்ரியுடன் 28 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.


அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா:


இதையடுத்து 179 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நேபாள அணிக்கு இந்தியா வீராங்கனைகள் கடும் சவால் அளித்தனர். அவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேபாள வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.நிதானமாக ஆடிய சீதா 18 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் இந்து 14 ரன்களுக்கும், ரூபினா 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசியில் பிந்து 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இறுதியில் நேபாள அணியை இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியால் இந்திய அணி மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முதல் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.


அரையிறுதியில் இந்த இரு அணிகளுடன் மோதும் மற்ற அணிகள எது என்று இதுவரை உறுதியாகவில்லை. இந்திய அணி நாளை மறுநாள் அரையிறுதியில் ஆட உள்ளது.