சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆடவர் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போலவே மகளிர் கிரிக்கெட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டிற்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது


மகளிர் டி20 உலகக்கோப்பை:


இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 மகளிர் உலகக்கோப்பை நடப்பாண்டு நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை டி20 உலகக்கோப்பையை நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.


நடப்பு டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், வங்கதேசத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு தற்போது வரை அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறிய நிலையில், இயல்பு நிலை முழுமையாக இன்னும் அங்கு திரும்பவில்லை.


ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜாக்பாட்:


இதனால், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அங்கு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்த ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் காட்டியது. இதையடுத்து, மகளிர் டி20 உலகக்கோப்பையை நடப்பாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.


சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஜெஃப் அல்லர்டிஸ் வங்கதேசத்தில் டி20 மகளிர் உலகக்கோப்பையை நடத்த முடியாதது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.


ஏற்பாடுகள் தீவிரம்:


போட்டிகளை நடத்த இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது டி20 உலகக்ககோப்பைக்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மகளிர் டி20 உலகக்கோப்பையை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல முன்னணி அணிகள் பங்கேற்க உள்ளனர்.