கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இச்சூழலில் அடுத்த டி20 உலகக் கோப்பை எங்கே நடைபெறும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்:


எங்கே நடைபெறும்?


கடந்த டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இச்சூழலில் அடுத்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. அதாவது இது தொடர்பான அறிவிப்பை கடந்த 2021 ஆம் ஆண்டு ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இரு நாடுகளும் இணைந்து டி20 உலகக் கோப்பையை நடத்துவது இது தான் முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையும், 2016 ஆம் ஆண்டு இந்தியாவும் நடத்தி இருந்தது. 


எப்போது நடைபெறும்?


வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் விளையாடும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்படும்.


இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதேபோல் சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரண்டு குரூப்பாக பிரிக்கப்படும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரண்டு அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.


தகுதி பெற்ற நாடுகள் எது?


12 அணிகள் தற்போது வரை டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பை பெற்றுள்ளது. அதாவது இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,அமெரிக்கா,ஆப்கானிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து  ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.


மேலும் படிக்க: IND vs SA Final T20 2024: பாண்டியா வீசிய கடைசி ஓவர்.. சூர்யகுமார் செய்த செயல்! ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம்!


 


மேலும் படிக்க: Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்