ஓய்வை அறிவித்த கோலி:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 29) இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அந்த வகையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கொண்ட்டாட்டத்தில் இந்திய அணி ரசிகரகள் இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.


அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரன் மிஷின் விராட் கோலி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இந்த டி20 சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விராட் கோலி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று கூறியிருந்தனர். அவர்கள் சொன்னதைப் போலவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். 59 பந்துகள் களத்தில் நின்ற விராட் கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் மொத்தம் 76 ரன்களை குவித்தார்.


அதன்படி இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற சூழலில் தான் விராட் கோலி டி20  போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்:


இது தொடர்பாக அவர் பேசுகையில், "இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்.


உலகக் கோப்பையை கைகளில் ஏந்த வேண்டும் என்று விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது எங்களின் நீண்ட காத்திருப்பு. அதாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோஹித் சர்மாவுக்கு இது 9வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று விராட் கோலி கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.