மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில் வென்று,  இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.


வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி:


இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்படாஸில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக  டி20 உலகக் கோப்பையை வென்றதோடு, கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்து அசத்தி இருக்கிறது.


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு புது விதமான வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது உத்தரப் பிரதேச காவல்துறை.


உத்தர பிரதேச போலீஸ் கொடுத்த சர்ப்ரைஸ்:


எக்ஸ் தளத்தில் உத்தரப் பிரதேச காவல்துறை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "𝑩𝒓𝒆𝒂𝒌𝒊𝒏𝒈 𝑵𝒆𝒘𝒔: தென்னாப்பிரிக்க மக்களின் இதயங்களை இந்திய பந்துவீச்சாளர்கள் உடைத்து குற்றம் செய்துள்ளனர். இதற்கான தண்டனை: கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்நாள் காதல்!" என பதிவிட்டுள்ளது.


 






பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நம் அணி அவர்களது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது” என குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அணி கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பிறகு, எந்தவொரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது.


இந்த வரலாற்று வெற்றியை புனே முதல் ஐதராபாத் வரை, சத்தீஸ்கர் முதல் கேரளா வரை, அதற்கும் அப்பால் ரசிகர்கள் நள்ளிரவில் தெருக்களில் குவிந்து, கொடிகளை அசைத்தும், பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாடினர்.