சூர்யகுமார் யாதவ் முன்பை விட ஒல்லியாகத்  தெரிகிறார். அவருடைய உடல் முன்பை விட மிகவும் வலிமையாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா பாட்டியா கூறியுள்ளார். 


டி20 உலகக்கோப்பை:


ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. அதன்படி இன்று (ஜூன் 2) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அமெரிக்கா அணி. அதேநேரம் இந்திய அணி தங்களது முதல் போட்டியை ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.


உடல் எடையை குறைத்த சூர்யகுமார்:


முன்னதாக நேற்று (ஜூன் 1) நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 31 ரன்கள் எடுத்தார்.  கடந்த ஜனவரி மாதம் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு பிறகு இவர் விளையாடிய முதல் சர்வதேச போட்டி வங்கதேச அணிக்கு எதிராகத்தான்.


குடல் இறக்க அறுவை சிகிச்சைக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இது ரசிகர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.  இந்நிலையில் தான் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக 14-15 கிலோ உடல் எடையை சூர்யகுமார் யாதவ் குறைத்ததாக ஊட்டச்சத்து உணவியல் நிபுணர் மற்றும் மைண்ட் யுவர் ஃபிட்னஸ் நிறுவனருமான ஸ்வேதா பாட்டியா கூறியுள்ளார். 


வலிமையாக இருக்கிறார்:


இது தொடர்பாக பேசியுள்ள அவர், “சூர்யகுமார் முன்பை விட ஒல்லியாகத்  தெரிகிறார். ஆனால் அவருடைய உடல் முன்பை விட மிகவும் வலிமையாக உள்ளது. இந்த இலக்கை அடைய முக்கிய உணவுடன் சேர்த்து கூடுதலாக சில உணவுகளையும் நாங்கள் திட்டமிட்டிருந்தோம்” என்று கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், “அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் சூர்யகுமாரின் உடல் எடை சற்று அதிகமானது. இது இயற்கையான செயல்தான். இருந்தாலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கேற்ற உணவுக்கட்டுப்பாடுகளை நாங்கள் அவரிடம் செயல்படுத்தினோம். அதன்படி 14 முதல் 15 கிலோ உடல் எடையை குறைத்து அதில் வெற்றியும் பெற்றார்” என்றார் ஸ்வேதா பாட்டியா.


சூர்யகுமார் யாதவ் உடல் எடையை குறைத்தில் 15 கிலோவில் கிட்டத்தட்ட 13 கிலோ கொழுப்பு என்பதை என்சிஏ வில் உள்ள டெக்சா என்ற இயந்திரம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?


மேலும் படிக்க: Watch Video: "அப்போ எனக்கு பசிக்கும்ல"..கூலாக அமர்ந்து சாப்பிட்ட விராட் கோலி! வைரல் வீடியோ!