கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பையில் இன்று (நவம்பர் 16) இரண்டாவது அரையிறுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.


முன்னதாக நேற்று (நவம்பர் 15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இச்சூழலில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதால், எந்த வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுடன் எழுந்துள்ளது.


 


திணறும் தென்னாப்பிரிக்கா:


முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அவர்கள அந்த அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.  4 பந்துகள் களத்தில் நின்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தேம்பா பாவுமா ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதேபோல், குயின்டன் டி காக் 14 பந்துகள் களத்தில் நின்று  3 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.  இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் பின்னர் வரும் வீரர்கள் நிதானமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு ரன்களை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்த சூழலில், களமிறங்கிய  ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.


அதன்படி, ஐடன் மார்க்ராம் 20 பந்துகள் களத்தில் நின்று 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல்,   ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகள் களத்தில் நின்று 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். 


இவ்வாறாக 11.5 ஓவர்கள் முடிவிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்க அணி திணறியது.  இந்த நான்கு விக்கெட்டுகளில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.


களத்தில் மில்லர்:


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய தென்னாப்பிரிக்க அணிக்கு நிதனமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி.  95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதனமாக விளையாடி ரன்களை எடுத்தனர்.  அப்போது இந்த ஜோடியை 30.4 வது ஓவரில் பிரித்தார் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் டிராவிஸ் ஹெட்.


அதன்படி, ஹென்ரிச் கிளாசென் 48 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 47 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த மார்கோ ஜான்சனும் டக் அவுட் ஆனார். இப்படி தென்னாப்பிரிக்க அணி  30.5 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு  6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆனால், நிதனமாக விளையாடி வரும் டேவிட் மில்லர் அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்க அணியை மீட்டு களத்தில் விளையாடி வருகிறார்.


மேலும் படிக்க: SA vs AUS Semi Final LIVE: 6 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலியா; களத்தில் இருக்கும் மில்லர் தென்னாப்பிரிக்காவை மீட்பாரா?


 


மேலும் படிக்க: SA Vs AUS Semi Final: தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அரையிறுதி... இன்றும், நாளையும் மழை பெய்தால் வெற்றி யாருக்கு?