உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் வெற்றி பெற்று இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


இந்த நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று 2வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா – லீக் தொடரில் அபாரமாக ஆடிய தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன.


அடுத்தடுத்து விக்கெட்:


இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆட்டத்தின் முதலாவது ஓவரிலே தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லீக் தொடரில் 4 சதங்கள் அடித்து அசத்திய குயின்டின் டி காக் டக் 3 ரன்களில் அவுட்டானார்.


அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மார்க்ரம் 10 ரன்களில் அவுட்டாக, மற்றொரு அதிரடி வீரர் வான்டர் டு சென் 6 ரன்னிலும் அவுட்டானார்.


மழையால் நிறுத்தம்:


அரையிறுதிப் போட்டியில் கிடைத்த பொன்னான வாய்ப்பில் தற்போது 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்காக கிளாசென் 10 ரன்னிலும், மில்லர் 10 ரன்னிலும் ஆடி வருகின்றனர். மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மழை நின்றாலும் அவுட்பீல்ட் ஈரமாக இருப்பதால் சிறிது நேரம் தாமதமாக மீண்டும் 3.55 மணிக்கு ஆட்டம் தொடங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணிக்காக கிளாசென் - மில்லர் ஜோடி ஆடி வருகின்றனர்.


உலகக் கோப்பையில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பொன்னான வாய்ப்பாக இந்த அரையிறுதி தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.


மில்லர் - கிளாசென் காப்பாற்றுவார்களா?


ஆனால், வானிலை மோசமாக இருப்பதால் பந்துவீச்சையே தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தொடர் முழுக்க அவர்கள் முதலில் பேட்டிங் செய்தபோது இமாலய ரன்களையே எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளனர். இதன் காரணமாக, இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பந்துவீச்சிற்கு பதிலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.


ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி காக், மார்க்ரம், வான்டர் டுசென் சொற்ப ரன்களில் அவுட்டானது அந்த அணிக்கு நெருக்கடியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை பந்துவீச்சாளர் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த தொடர் முழுக்க தென்னாப்பிரிக்க அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தி கிளாசெனும், மில்லரும் இந்த போட்டியில் 20வது ஓவருக்கு முன்பே களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இவர்கள் இருவரும் நிதானமாக நின்று அதிரடியாக ஆடினால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயிக்க முடியும். மேலும், மழை பெய்யும் அபாயமும் இருப்பதால் ஆட்டம் டக்வொர்த் லீவிசுக்கு சென்றால் இவர்களுக்கு சாதகமான சூழல் அமையுமாறும் இவர்கள் பார்த்து ஆட வேண்டும்.