இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸஅமிரிதி மந்தனா. வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் முதல் சீசனில் ரூபாய் 3.4 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர். மேலும், எல்லீஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், டிவைன், ரேணுகா சிங் ஆகியோரை கொண்ட பெங்களூர் அணிக்கு ஸ்மிரிதி மந்தனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய அணிக்காக பல நெருக்கடியான தருணங்களில் அரைசதங்களையும், சதத்தையும் விளாசி அட்டகாசப்படுத்தியவர் மந்தனா. அவரது தலைமையில் களமிறங்கியுள்ள ஆர்.சி.பி. ஆண்கள் பெங்களூர் அணி இதுவரை செய்யாத சாதனையான சாதனையை செய்து ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது என்பதே உண்மை.




ஏனென்றால், மகளிர் ஐ.பி.எல். தொடரின் முதல் 3 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, அந்த அணியின் தூணாக கருதப்பட்ட கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 23 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 ரன்கள் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 23 ரன்களும், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களும் மட்டுமே எடுத்தார்.


பெங்களூர் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்மிரிதி மந்தனா, டிவைன், எல்லீஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் ஆகியோர்தான் உள்ளனர். ஆனால், அவர்கள் மிகப்பெரிய ஸ்கோரை எந்த போட்டியிலும் குவிக்கவில்லை. கட்டாய வெற்றியை நோக்கி இன்று களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஸ்மிரிதி மந்தனா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போட்டியும் ஏமாற்றமாகவே அமைந்தது. அதிரடியாக ஆட நினைத்த மந்தனா 4 ரன்களில் கெய்க்வாட் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். எல்லீஸ் பெர்ரி 52 ரன்களை எடுத்தும், பெங்களூர் அணி 138 ரன்களுக்கு சுருண்டுவிட்டது.




27 வயதான இடது கை வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இந்திய அணிக்காக இதுவரை 116 டி20 போட்டிகளில் ஆடியவர். அதில் 22 அரைசதங்களுடன் 2802 ரன்களை குவித்துள்ளார். 77 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 25 அரைசதங்களுடன் 3073 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 2 அரைசதத்துடன் 325 ரன்களும் எடுத்துள்ளார். அந்தளவு அபாரமான திறமை கொண்ட ஸ்மிரிதி மந்தனாவின் அருமையான இன்னிங்ஸ்களை பார்த்தவர்களுக்கு அவர் எப்பேற்பட்ட திறமைசாலி என்பது தெரியும்.


ஆனால், அவரது திறமைக்கும் அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் ஆடும் பேட்டிங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதே உண்மை. அவரது இந்த மோசமான பேட்டிங்கிற்கு அவர் மீது விழுந்துள்ள கேப்டன்சி அழுத்தம்தான்   காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகள் அவரது பேட்டிங்கை நெருக்கடிக்குள்ளாக்கி அவரது இயல்பான பேட்டிங்கை தடுமாறச் செய்து வருகிறது. ஸ்மிரிதி மந்தனா பழைய மந்தனவாக மீண்டு வருவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க:IND vs AUS, 4th Test: கவாஜா, கேமரூன் கீரீன் அபாரம்..! 480 ரன்களுக்கு ஆஸ்திரேலிய ஆல் அவுட்..! அஸ்வின் அபார பவுலிங்..! 


மேலும் படிக்க: Watch Video: வானுயர்ந்த பந்து.. மின்னல் வேகத்தில் பாய்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!