மகளிர் பிரீமியர் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதி கொண்டன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் களமிறங்கியது. நிகர ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி முதலிடத்திலும், டெல்லி அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன. 


முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே டெல்லி அணியின் பேட்டிங் அடிசறுக்க, பின்னால் வரிசை வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற தொடங்கினர். கேப்டன் லேனிங் அதிகபட்சமாக 43 ரன்களும், ரோட்ரிக்ஸ் 23 ரன்களும் எடுத்திருந்தனர். இறுதியில் டெல்லி அணி  18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மும்பை அணி சார்பில் சைகா இஷாக், வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்களூம், பூஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். 


106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. தொடக்க வீரர்களாக மேத்யூஸ் மற்றும் யஸ்திகா டெல்லி அணியின் பவுலர்களின் பந்துகளை தாக்க தொடங்கினர். கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்ட, பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்தது.


அதிரடியாக ஆடிவந்த யஸ்திகா 31 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.அவர் மட்டும் 8 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யஸ்திகா அடித்து ஆடிய பந்தை ரோட்ரிக்ஸ் தாவி கேட்ச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு, 75 ரன்கள் குவித்தது. நிலையாக ஆடிவந்த மேத்யூஸ் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.  அதன் பின்னர் கை கோர்த்த ஹர்மன் ப்ரீத் மற்றும் பர்ண்ட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.இறுதியில் மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 






முன்னதாக கடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எல்லைக் கோட்டில் நின்று மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்தார். இதை மைதானத்தில் பார்த்த ரசிகர்கள் வீடியோவாக எடுத்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். மைதானத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் அதிக சத்தம் உற்சாகப்படுத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸின் இந்த நடன வீடியோ சில நிமிடங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.