அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை குவித்துள்ளது. கவாஜா 180 ரன்களையும், கேமரூன் கிரீன் 114 ரன்களையும் குவித்துள்ளனர். அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச், 9) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதானமாகவும்  சிறப்பாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தது. அதிலும், தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் என்ன செய்வது என  தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இந்திய அணி சார்பில் 6 பந்து வீச்சாளர்கள் பந்து வீசியும், கவாஜாவை வீழ்த்த முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழந்து, 255 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் இருந்தது. முதல் நாளே கவாஜா தனது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். இந்த சதம் தான் இந்த டெஸ்ட் தொடர் வரிசையில் ஆஸ்திரேலியா சார்பில் அடிக்கப்பட்ட முதல் சதமாக பதிவானது. 

 

அதன் பின்னர் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா 378 ரன்களில் இருந்த போது சதம் கடந்து விளையாடி வந்த கேம்ரூன் கீரின் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 170 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரியும், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற்ற ஆட்டம் இந்தியா கட்டுக்குள் வருவதாக இருந்தது. ஆனால், கவாஜா நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தார். ஆனால் அவரை அக்‌ஷர் பட்டேல் 180 ரன்களில் வெளியேற்றினார். ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மார்ஃபியும் நாதன் லைனும் ஆட்டத்தினை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  சிறிது நேரம் நிலைத்த இந்த பார்ட்னர் ஷிப் ஆஸ்திரேலிய அணியை 500 ரன்களை எட்டவைத்து விடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஸ்வின், இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை 480 ரன்களுக்கு முடிக்க வைத்தார். இந்தியா சார்பில், அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.