மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.
மகளிர் ஐ.பி.எல்.:
இதில், உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியை தவிர மற்ற நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் லீக் சுற்றில் தலா எட்டு போட்டிகள் உள்ளது. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரிலும் மோதும்.
இதில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி மூன்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இது ஆர்.சி.பி. ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் ஐ.பி.எல் போட்டியில் 15 சீசன்கள் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அந்த அணியின் மகளிர் பிரிவு இந்த சீசனில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.
இந்த சீசனில் முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில், 2 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்த டெல்லி அணி, பெங்களூரு அணியை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 163 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
வாழ்வா? சாவா?
அதன் பின்னர், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியுடன் மோதிய ஆர்.சி.பி அணி வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது. இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய அணி என்ற மிகவும் மோசமான சாதனையை முதல் சீசனிலேயே பெங்களூரு அணி படைத்துள்ளது. இன்று உத்தர பிரதேச அணிக்கு எதிராக நடக்கும் போட்டி ஆர்.சி.பி அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. இந்த போட்டியில் ஆர்.சி.பி. தோற்றால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் முதல் அணியாக மாற 90% வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு போர்பவுனி மைதானத்தில் நடக்கும் போட்டியின் முடிவு ஆர்.சி.பி அணியின் முடிவா என பொருத்து இருந்தது தான் பார்க்க வேண்டும்.