மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் கேப்டனும் அதிரடிக்கு பெயர் போனவருமான மந்தனாவும், டிவைனையும் ஆட்டத்தினை தொடங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர். குறிப்பாக மந்தனா டிவைனுக்கு ஸ்டைரைக் கொடுத்து வந்தார். தனக்கு கிடைத்த பந்துகளை சிரமமின்றி ரன்கள் சேர்த்தார். ஆனால் மந்தனா தூக்கி அடிக்க முயற்சி செய்து 3 ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய பெரி அடித்து ஆட, பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் பவுண்டரிகளை பறக்கவிட்ட இந்த கூட்டணியை எக்லஸ்டோன் வெளியேற்றினார். சிறப்பாக ஆடிவந்த டிவைன் 36 ரன்களில் எக்ளஸ்டோன் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 24 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 36 ரன்கள் சேர்த்து இருந்தார். இவரது விக்கெட்டுக்குப் பிறகு பெங்களூரு அணியின் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்து இருந்தது. பெரிக்கு சப்போர்ட் செய்து வந்த கனிகா 11 ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹேதர் நைட் 12 ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் பெங்களூரு அணி தடுமாற ஆரம்பித்தது. விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் 35 பந்தில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு பெரி 50 ரன்கள் சேர்த்து சிறப்பான அரைசதத்தினை பூர்த்தி செய்ததுடன் அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.
இவருடன் கை கோர்த்த ஸ்ரேயங்கா பாட்டீல் களமிறங்கியது முதல் அடித்து ஆட ஆரம்பித்தார். ஆனால் அவரும் 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில், எக்ளஸ்டோன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேற 14.4 ஓவரில் ஆர்.சி.பி. 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்து இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து இருந்தது. 17வது ஓவரில் சிற்ப்பாக ஆடிவந்த பெரி ஆட்டமிழந்த நிலையில், பெர்ன்ஸும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ரிச்சா கோஷ் தேவையில்லாமல் ரன் அவுட் ஆக, போட்டியின் கடைசி 4 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தினை மொத்தமாக தன்வசப்படுத்தியது உ.பி வாரியர்ஸ் அணி. 19.2 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து138 ரன்கள் சேர்த்தது.
உத்தரபிரதேச அணியின் சார்பில் எக்ளஸ்டோன் 4 விக்கெட்டுகளும் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.