டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் நியூசிலாந்து Vs ஆஃப்கானிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வென்றிருந்தால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பில் நிலைத்திருக்கும். ஆனால், நியூசிலாந்து அணி இந்த போட்டியை வென்றது. இதனால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடியதற்கான காரணங்கள் என்ன?


டாஸ்:


இந்திய அணியின் தோல்விக்கு டாஸ் தோல்வியும் ஒரு காரணம் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேசியிருந்தார். அது ஓரளவுக்கு உண்மையே. இரவில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் பந்துவீச சிரமமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணிகள் சேஸிங்கை தேர்வு செய்வதையே விரும்பின. டார்கெட்டை சேஸ் செய்தே அணிகளே அதிகமான போட்டிகளில் வென்றிருக்கவும் செய்துள்ளன. ஆனால், இந்தியாவிற்கு அது சாதகமாக அமையவில்லை.




இந்திய அணி இதுவரை ஆடியிருக்கும் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் கேப்டன் கோலி டாஸில் தோற்றிருந்தார். அந்த 3 போட்டிகளிலுமே இந்திய அணி முதலில் பேட் செய்ய வேண்டியிருந்தது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட் செய்தது பாதகமாக அமைந்தது. அந்த அணிகளுக்கெதிரான தோல்விகளுக்கு டாஸ் தோல்வியும் முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும் இந்திய அணியின் மோசமான பெர்ஃபார்மென்ஸுக்கு டாசை ஒரு காரணமாக கூறி சப்பைக்கட்டு கட்ட முடியாது. ஒரு சாம்பியன் அணி இந்த தடைகளையெல்லாம் தாண்டியே வெல்ல வேண்டும். இங்கிலாந்து அணி டாஸை தோற்று முதல் பேட்டிங் செய்கிற போதும் சிரமங்களை தாண்டி வெல்கிறது. பாகிஸ்தான் அணி தங்களை தாங்களே பரிசோதித்து கொள்ள டாஸை வென்றாலும் முதலில் பேட் செய்து வெல்கிறது. ஆனால், இந்திய அணியால் அப்படி வெல்ல முடியவில்லை. 


அணிக்கட்டமைப்பில் பிரச்சனை:


டி20 போட்டிகளுக்கேற்ற நவீன அணிக்கட்டமைப்பு இந்தியாவிற்கு வாய்க்கப் பெறவில்லை. இந்திய அணி இந்த தொடருக்குள் நுழையும் போது சரியாக 5 பௌலிங் ஆப்சனோடு மட்டுமே களமிறங்கியது. டி20 போட்டிகளில் இது மிகப்பழைய ஸ்டைல். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளில் இப்போது 8 பேட்டிங் ஆப்சனும் 6-7 பௌலிங் ஆப்சனும் இருக்கிறது. அந்த அணிகள் டி20க்கேற்ற நவீன முறைப்படி அதிகப்படியான ஆல்ரவுண்டர்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருக்கும் போது பேட்டிங்-பௌலிங் இரண்டிலுமே அடர்த்தி அதிகமாக இருக்கும்.




ஆனால், இந்திய அணியில் அப்படியில்லை. ப்ளேயிங் லெவனில் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா என இரண்டே இரண்டு ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அந்த இரண்டு பேரிலும் ஹர்திக் பாண்ட்யா இந்த தொடருக்குள் வரும் வரை பந்துவீசுவாரா என்பது தெரியாமலேயே இருந்தது. ஜடேஜாவும் ஐந்தாவது பௌலிங் ஆப்சனாகவே இருந்தார். பேட்டிங் ஆகட்டும், பௌலிங் ஆகட்டும் இரண்டிலுமே இந்திய அணிக்கு என்ன தேவையோ அது மட்டுமே இருந்தது. கூடுதல் ஆப்சன்கள் என யாருமே இல்லை. இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.


முக்கியமான கட்டத்தில் தவறான முடிவு:


முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றிருந்ததால் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வென்றே ஆக கட்டாயத்தில் இருந்தது. ஆனால், மிக முக்கியமான அந்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய சூழலில் இந்திய அணி மிக மோசமான ஒரு முடிவை எடுத்தது. இந்தியாவின் டாப் ஆர்டரை மொத்தமாக குழப்பி ஓப்பனிங்கில் கே.எல்.ராகுலையும் இஷான் கிஷனையும், நம்பர் 3ல் ரோஹித் சர்மாவையும் நம்பர் 4 இல் கோலியும் இறக்கப்பட்டார்கள். வழக்கத்துக்கு மாறான தலைகீழான ஆர்டர் இது.




ராகுலும் இஷன் கிஷனும் இதற்கு முன் ஒரே ஒரு போட்டியில்தான் ஒன்றாக ஓப்பனிங்கில் இறங்கியிருக்கிறார்கள். அதிலும் சொதப்பவே செய்திருக்கிறார்கள். ரோஹித் கடைசியாக எப்போது நம்பர் 3 இல் இறங்கினார் என யாருக்கும் நியாபகமே இல்லை. விராட் கோலியும் தனது ஆஸ்தான நம்பர் 3 இடத்தை விட்டுக்கொடுத்தார். முக்கியமான போட்டியில் இப்படி இதற்கு முன் நிரூபிக்கப்படாத ஒரு டாப் ஆர்டரை இறக்கி சொதப்பியிருந்தார்கள்.


இந்த மூன்று விஷயமுமே இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்த தோல்வி கொடுத்திருக்கும் படிப்பினைகளை எடுத்துக் கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண