இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா. இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் ஜடேஜா. தற்போது ஆசிய கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள ஜடேஜாவிற்கு மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஜடேஜா காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த சூழலில், இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியாக காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜடேஜா உலககோப்பையில் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலககோப்பை டி20 போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்று அசத்தும் ஜடேஜா இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக உள்ளார். இந்திய அணியில் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஆல்ரவுண்டர்கள் இடத்தை அலங்கரித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவமுள்ள ஜடேஜா இந்திய அணிக்காக ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக உள்ளது. ஏற்கனவே, கடந்த சில தொடர்களில் ஓய்வில் இருந்த ஜடேஜா ஆசிய கோப்பை மூலமாகதான் இந்திய அணிக்கு திரும்பினார். ஜடேஜா காயத்தில் இருந்து எப்போது மீள்வார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த தகவலும் வரவில்லை.
ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரை களமிறக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஜடேஜா இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் 17 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 523 ரன்களை குவித்துள்ளார். 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 828 ரன்களை விளாசியுள்ளார். 64 டி20 போட்டிகளில் 457 ரன்களை எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 242 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 189 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஆசிய கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ZIM Won AUS : ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே..! 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! உற்சாகமான ரசிகர்கள்
மேலும் படிக்க : India Squad Asia Cup: ஆசிய கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகிய ஜடேஜா! காரணம் இதுதான்! மாற்று வீரர் யார் தெரியுமா?