ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டவுன்ஸ்வில்லே நகரில் இன்று நடைபெற்றது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்களில் அவுட்டானார்.




அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 4 ரன்களில் அவுட்டாக, அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிசும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இளம் வீரர் கிரீன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நங்கூரம் போல இருந்தார்.17.6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


அப்போது, ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர்- மேக்ஸ்வெல் ஜோடி சிறிது நேரம் களத்தில் நின்றது. இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார். அப்போது, ஜிம்பாப்வே அணியின் இளம் பந்துவீச்சாளர் ரியான் பர்ல் பந்துவீசினார். அவரது சுழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தனர்.




அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 22 பந்தில் 3 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பர்ல் பந்தில் அவுட்டானார். அவருக்கு பிறகு களமிறங்கிய ஆஸ்டன் அகர் டக் அவுட்டாகியும், மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களிலும் ரியான் பர்ல் பந்தில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய வார்னர் 94 ரன்களில் ரியான் பர்ல் சுழலில் சிக்கினார். அவர் மட்டும் 14 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசியிருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 6வது பந்துவீச்சாளர் ரியான் பர்ல் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் கைடானோ, மாருமனி தொடக்கம் அளித்தனர், கைடானோ 19 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மாதவரே 2 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் டக் அவுட்டாகியும் ஏமாற்றமளிக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.




பின்னர், களமிறங்கிய கேப்டன் ரெஜிஸ் சகப்வா பொறுப்புடன் ஆடினார். தொடக்க வீரர் மாருமனி 47 பந்துகளில் 4 பவுண்டரி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், டெயிலண்டர்களை வைத்துக்கொண்டு சகப்வா போராடினார். டோனி முனியோங்கா 17 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பர்ல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும், சகப்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் 39 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 142 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியாவும், ஜிம்பாப்வே அணியும் இதுவரை 32 ரன்களில் நேருக்கு நேர் மோதிய ஒருநாள் போட்டிகளில் 29 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தரவரிசையில் 5வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி ஒருநாள் தரவரிசையில் 13வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.