ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. அத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஏற்கெனவே காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா விலகியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஜடேஜா 35 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தச் சூழலில் அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,தீபக் ஹூடா, ரிஷப் பண்ட்,தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய்,புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்
முன்னதாக ஹாங்காங் போட்டிக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா, ”பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தான் பந்துவீசினர். டி20 போட்டிகளில் சில சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை என்றாலும் விக்கெட்களை எடுப்பார்கள். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசியிருந்தாலும் விக்கெட் கிடைக்காமல் இருக்கும். இடது கை பந்துவீச்சாளர்கள் மற்றும் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களை இடது கை ஆட்டக்காரர்கள் எளிதாக சமாளிக்க முடியும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பார்த்தவுடன் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது.
அதன்படியே என்னை விரைவாக களமிறக்கினர். அப்போது என்னுடைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. எந்த சூழலுக்கு நான் தயாராக இருந்தேன். அதனால் அது எனக்கு எளிதாக அமைந்தது” எனத் தெரிவித்திருந்தார்.