உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணி கடும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வி பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் 3 வடிவிலான போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விலகியுள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக யாரையும் நியமிக்கவில்லை. முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியில் ஏற்கனவே பாபர் அசாமிற்கும், ஷாகின் அப்ரிடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது டி20 போட்டிகளின் கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷான் மசூத் 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1597 ரன்கள் எடுத்துள்ளார். 1989ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்த இவர் 9 ஒருநாள் போட்டிகளில் 1 அரைசதத்துடன் 163 ரன்களும், 19 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 396 ரன்களும் எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின்ஷா அப்ரிடி டி20 அணிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்த ஷாகின் அப்ரிடி இதுவரை 52 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் டி20 போட்டியில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சாக 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 105 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ள ஷான் மசூத் மற்றும் ஷாகின் அப்ரிடிக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஷாகின் அப்ரிடி நியமனத்திற்கு பாபர் அசாம் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli 50th Century: அதிக சதம் அடித்த விராட் கோலி... பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
மேலும் படிக்க: Babar Azam: பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி