உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, அவரது கேப்டன் பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்துள்ளார்.


பாபர் அசாம் ராஜினாமா:


இதுதொடர்பாக, பாபர் அசாம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை பாகிஸ்தான் அணியை வழிநடத்துமாறு அழைத்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில், நான் பல ஏற்றங்களையும், சறுக்கல்களையும் அனுபவமாக கடந்துள்ளேன். ஆனால், நான் என் முழு மனதுடன், ஆர்வத்துடன் பாகிஸ்தான் அணியின் பெருமையை கிரிக்கெட் உலகில் தொடரச் செய்துள்ளேன்.


வெள்ளை நிற பந்திலான போட்டியில் நம்பர் 1 இடத்தை எட்டியது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கலவையான உழைப்பு ஆகும். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஒத்துழைப்பை அளித்தவர்களுக்கு நன்றி.


இன்று நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு மிகவும் கடினமானது. ஆனால், இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன். ஒரு வீரராக மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நான் பாகிஸ்தானுக்காக விளையாடுவேன். புதிய கேப்டனுக்கு நான் ஒத்துழைப்பை வழங்குவதுடன் அணிக்கு என்னுடைய அனுபவத்தையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன். இந்த பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எனது பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


உலகக் கோப்பைத் தோல்வி:


இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியபோது கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று பாகிஸ்தான். பல ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை விளையாடுவதற்காக அவர்கள் வந்தது முதலே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.


பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணி இந்த தொடரை நெதர்லாந்து அணியுடன் வெற்றியுடனே தொடங்கியது. இலங்கை அணியையும் வீழ்த்திய பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளிடம் தோற்றது. கடைசி கட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினாலும், இங்கிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.


ஆப்கானுடனான தோல்வி:


இந்த தொடரில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியிருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த தோல்விக்கு பிறகும், தொடரை விட்டு வெளியேறிய பிறகும் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல்கள் எழுந்தது. இந்த சூழலில் பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்:


2000ம் காலகட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கேப்டன் பாபர் அசாம் என்றே சொல்லலாம். மிஸ்பா உல் ஹக், சர்ப்ராஸ் அகமதுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை நன்றாக கட்டமைத்தார் என்றே சொல்ல வேண்டும். அவரது தலைமையில் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை என்பதை கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி மாற்றிக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


29 வயதே ஆன பாபர் அசாம் 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்களுடன் 3 ஆயிரத்து 772 ரன்களும், 117 ஒருநாள் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் 32 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 729 ரன்களும், 104  டி20 போட்டியில் ஆடி 3 சதங்கள், 30 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 485 ரன்கள் எடுத்துள்ளார்.