உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்தாக மாறியுள்ளது என்றே சொல்ல வேண்டும். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


சச்சின் சாதனை முறியடிப்பு:


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக அபாரமாக ஆடிய விராட் கோலி 117 ரன்களை விளாசினார். இது அவரது 50வது சதம் ஆகும். ஒருநாள் போட்டியில் யாருமே நெருங்க முடியாது என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை சமன் செய்து அவரையே வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி 50 சதங்களை இன்று விளாசி படைத்துள்ளார்.






சச்சின் வாழ்த்து:


புதிய வரலாறு படைத்த விராட் கோலிக்கு கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.


ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ய, எனது சொந்த மைதானம் உதவியுள்ளது.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


சச்சினின் தவிர்க்க முடியாத சாதனை தகர்ப்பு:


கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினின் பல்வேறு சாதனைகள் இதுவரை முறியடிக்கப்படாமலே இருக்கிறது. அவரின் பல சாதனைகளை மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி முறியடித்துள்ளார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை இன்று விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.


மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49 சதங்கள், 1 இரட்டை சதம், 96 அரைசதங்கள் என ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18 ஆயிரத்து 426 ரன்களை குவித்துள்ளார். இதில், சச்சின் டெண்டுல்கர் 90 ரன்களுக்கு மேல் அவுட்டானது மட்டும் 10 முறைக்கு மேல் இருக்கும்.


ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்கள்:


சச்சின் ஆடிய இன்னிங்ஸ்களில் பாதி இன்னிங்ஸ்களே ஆடியுள்ள விராட் கோலி அவரது அதிக சத சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே தொடரில் அதிக ரன்கள்  விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையையும் விராட் கோலி இன்று முறியடித்தார்.


சச்சின் 1989ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தன் பதின்ம வயதில் அறிமுகமானவர். கடந்த 2013ம் ஆண்டுடன் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 22 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.