இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 திருவிழா இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் மூன்று போட்டிகள்தான் மீதமுள்ளது. இதில் இந்திய அணி - நியூசிலாந்து அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்திய அணியின் இன்னிங்ஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் தொடக்கம் முதல் அதிரடியாக உயர்ந்ததால், நியூசிலாந்து அணி பவர்ப்ளேவிலேயே சுழற்பந்து வீச்சினைக் கொண்டுவந்தது. ஆனால் ரோகித் சர்மாவின் ருத்ரதாண்டவத்திற்கு முன்னாள் நியூசிலாந்து அணியின் பவுலிங் வியூகம் அனைத்தும் தவிடுபொடியானது. 29 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 47 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த விராட் கோலி நிதானமாக ஆடியதால், அணியின் ஸ்கோர் ஒரு சில ஓவர்கள் மந்தமாக நகர்ந்தது. தான் எதிர்கொண்ட 13வது பந்தில் விராட் கோலி பவுண்டரி விளாசினார். இதன் பின்னர் விராட் - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக ஆடியதால் இந்திய அணியின் ரன்ரே வேகம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்தது. அரைசதம் கடந்த நிலையில் கில்லிற்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்படவே, அவர் ரிடையர் ஹட் மூலம் வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கியது முதல் அதிரடி காட்ட இந்திய அணியின் ரன்ரேட் குறையவே இல்லை. இவருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாட, நியூசிலாந்து அணிக்கு விக்கெட் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் தவிடு பொடியானது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது சதத்தினை எட்டினார். இதன் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதமாக பதிவானது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசிய சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (49 சதங்கள்) முறியடித்தார்.
113 பந்தில் 117 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்த சதத்தினை சச்சினுக்கு சமர்பிக்கும் விதமாக 10 விரல்களைக் காட்டி தலைவணங்கினார். அதேநேரத்தில் தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு முத்தத்தினை மைதானத்தில் இருந்தபடி பறக்கவிட்டார். அதன் பின்னர் வந்த கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் தனது சதத்தினை நோக்கி முன்னேறினார். இவர் 67 பந்தில் தனது சதத்தினை எட்டினார். இறுதிகட்டத்தில் இருவரும் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி இந்திய அணியை 400 ரன்களை நோக்கி முன்னேற வைத்தனர். அதிரடியாக சிக்ஸ்சர்கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை 70 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 397 ரன்கள் சேர்த்தது.