நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள்.


அதில் ரோகித் சர்மா 47 ரன்களும் சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர். அதேபோல் ஸ்ரேயாஸும் 105 ரன்கள் குவித்தார்.


சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி:



இன்றைய போட்டியில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். அதன்படி, 50 சதத்தை பூர்த்தி செய்தார் கோலி. மொத்தம் 113 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 2 சதம் என மொத்தம் 117 ரன்கள் குவித்தார்.


பிரதமர் மற்றும் முதலமைச்சர் வாழ்த்து:



சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலியை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர்.






இந்நிலையில், விராட் கோலியை பிரதமர் மோடி வாழ்த்தி உள்ளார். இது தொடர்பாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ விராட் கோலி இன்று தனது 50-வது ஒரு நாள் சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுகளை வரையறுக்கும் விடாமுயற்சியின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அவர் எட்டியிருப்பது அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும். விராட் கோலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோலை நிர்ணயித்துக் கொண்டே இருக்கட்டும்” என்று பிரதம மோடி கூறியுள்ளார்.


 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்பமுடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். விராட் கோலி, நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக்கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.


 






 


தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார்.


ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Virat Kohli: அதிக ரன்கள், அதிக அரைசதம்... சாதனை மேல் சாதனை செய்யும் விராட் கோலி! விவரம் இதோ!


 


மேலும் படிக்க: Virat Kohli: உலகக் கோப்பை தொடர்... சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!