உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று இலங்கையுடனான போட்டியில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேரின் அபாரமான ஆட்டத்தால் இலங்கைக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


இலங்கையை சிதைத்த ஷமி:


இதையடுத்து, 358 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பும்ரா வீசிய முதல் பந்திலே தொடக்க வீரர் நிசங்கா அவுட்டானார். அதன்பின்பு, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இலங்கை அணியை நிலைகுலையச் செய்தனர்.


இந்த தொடரில் முதல் 4 ஆட்டங்களில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிராகத்தான் களமிறங்கினார். அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய அவர், அடுத்து நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


புதிய வரலாறு:


முகமது ஷமியின் இந்த அபார பந்துவீச்சின் மூலமாக இலங்கையை 55 ரன்களில் சுருட்டியது. இதன்மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமி புதிய வரலாறு படைத்துள்ளார்.


அதாவது, ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற ஜாகிர்கானின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஜாகிர்கான் இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். முகமது ஷமி இன்றைய போட்டி மூலமாக 14 போட்டிகளிலே 45 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


அதிக முறை 5 விக்கெட்டுகள்:


இந்திய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முகமது ஷமி, ஜாகிர்கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஜவஹல் ஸ்ரீநாத் 34 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4வது இடத்தில் 16 போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 5வது இடத்தில் அனில் கும்ப்ளே 18 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் மெக்ராத் 71 விக்கெட்டுகளை வீழ்த்தி யாருமே நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் இலங்கையின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் முரளிதரன் 68 விக்கெட்டுகளுடன் உள்ளார். ஸ்டார்க், மலிங்கா 56 விக்கெட்டுகளுடன் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளனர்.  


உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனை மட்டுமின்றி மற்றொரு புதிய சாதனையையும் ஷமி படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் 3 முறை இந்த சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க்குடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார். 


மேலும் படிக்க: IND Vs SL, Match Highlights: போடு வெடிய..! கெத்தாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா..! இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி


மேலும் படிக்க: Sachin Tendulkar: ”என்ன சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு வைச்சிருக்காங்க”- கலாய்க்கும் நெட்டிசன்கள்!