IND vs SL Innings Highlights: உலகக் கோப்ப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர்கள் கில் மற்றும் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


இந்தியா - இலங்கை மோதல்:


உலகக் கோப்பையின் 33வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி க்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள இலங்கை எதிர்கொண்டுள்ளது.


அதிர்ச்சி தந்த ரோகித்:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். போட்டியின் முதல் பந்தையே ரோகித் பவுண்டரிக்கு விளாச, நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக 400 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக போட்டியின் இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி ரோகித் பெவிலியன் திரும்பினார்.


கில் - கோலி அபாரம்:


இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கில் மற்றும் கோலி பொறுப்புடன் விளையாடி, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினர். ஆரம்பத்தில் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்த மைதானம், நேரம் செல்ல செல்ல பேட்டிங் எளிதானது. இதனால் கோலி மற்றும் கில் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.


தவறிய சதங்கள்:


அரைசதம் கடந்ததும் கில் மற்றும் கோலி ஆகிய இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க தொடங்கினர். இதனால், இந்திய அணியின் ரன்கள் மளமளவென அதிகரிக்க தொடங்கியது. இதனால் இருவரும் சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 92 ரன்கள் சேர்த்து இருந்தபோது கில்லும், 88 ரன்கள் சேர்த்து இருந்தபோது கோலியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 189 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கோலி நடப்பு உலகக் கோப்பையில் 400 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையுடன், அணிக்காக இறுத்அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்:


இதையடுத்து வந்த கே. எல். ராகுல் 21 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி, வெறும் 36 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார். தொடர்ந்து, அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 56 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜடேஜாவும் தனது பங்கிற்கு அதிரடி காட்டி 35 ரன்களை சேர்த்தார்.


இலங்கை அணிக்கு ரன்கள் இலக்கு:


இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை சேர்த்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து, இந்திய அணி நிர்ணயித்த 358 ரன்கள் என்ற இலக்கை இலங்கை நிர்ணயிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.