IND Vs SL, Match Highlights: உலகக் கோப்பையில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி தொடர்ந்து ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியல் முதலிடத்தில் நீடிக்கிறது.
இலங்கையை அடக்கிய இந்தியா:
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி நிர்ணயித்த 358 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரின் மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், இலங்கை அணி செய்வதறியாமல் விக்கெட்டுகளை வாரிக்கொடுத்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களான நிசாங்கா, கருணரத்னே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த சமர விக்ரமா, ஹேமந்தா மற்றும் சமீரா ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினர். கேப்டன் மெண்டிஸ் மற்றும் அசலன்கா தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மேத்யூஸ் 12 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக ரஜிதா 14 ரன்களை சேர்த்தார்.
ஆல்-அவுட் ஆன இலங்கை:
இறுதியில் 19.4 ஓவர்களிலேயே வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். பும்ர மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மூலம், நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஷமி செய்த சம்பவம்:
இந்த போட்டியில் 5 ஓவர்களை மட்டுமே வீசிய் ஷமி, ஒரு ஓவரை மெய்டனாக்கி, 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார். முன்னதாக ஜாகீர் கான் 23 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட்டுகள் எடுத்த நிலையில், வெறும் 14 இன்னிங்ஸ்களில் ஷமி 45 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அதோடு, உலகக் கோப்பையில் அதிக முறை 5-விக்கெட்ஸ் எடுத்த வீரர் என்ற, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் சாதனையையும் ஷமி சமன் செய்துள்ளார்.
இலங்கை அவுட்:
அதேநேரம் நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. இதனால், அரையிறுதிக்குச் செல்வதற்கான அந்த அணியின் வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். தற்போதைய சூழலில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.