கிரிக்கெட் கடவுள்:


இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். சுமார் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ள இவர் கடந்த 1989 ஆம்  ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸை விளையாடினார்.


அதேபோல், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அதில் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விளாசியவர்.


கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். இச்சூழலில், 50-வது பிறந்தநாளை கடந்திருக்கும் அவரை பாராட்டும் விதமாக  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 1) அவரது ஆள் உயர சிலை திறக்கப்பட்டது. 


இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவர், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அமோல் காலே, சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் மற்றும் மகள் சாரா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.


 


அப்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், ”கடந்த 1983 ஆம் ஆண்டில் தான் நான் முதன் முதலாக வான்கடே மைதானத்திற்கு வந்தேன். அப்போது என்னுடைய வயது வெறும்  10 தான். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய தொடர் அது. அப்போது எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த போட்டியை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்களுடன் நானும் சென்றேன். நாங்கள் நார்த் ஸ்டேண்டில் இருந்து போட்டியை பார்த்தோம். 


பின்னர் 1987 உலகக் கோப்பை தொடரின் போது நான் பால்-பாயாக தேர்வானேன். அப்போது இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது எனக்கு 14 வயது. சுனில் கவாஸ்கர் என்னை ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்து சென்றார்.இந்த மைதானத்தில் எனது மகிழ்ச்சிகரமான தருணம் என்றால் அது 2011 உலகக் கோப்பை வெற்றி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்வில் மிக மகிழ்வான தருணம் அது.


கடந்த 2013 ஆம் ஆண்டு எனது கடைசி போட்டியை இந்த மைதானத்தில் தான்  நான் விளையாடினேன் ” என்று கூறியிருந்தார்.


 


சச்சினா ? ஸ்மித்தா?


நேற்று சிலை திறக்கப்பட்ட சூழலில் இன்று அந்த சிலையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதன்படி, இந்த சிலை சச்சின்சிலையா அல்லது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சிலையா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் , பல்வேறு மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.