ரஞ்சி தொடர்களை போலவே இந்தியாவில் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதற்காக பல்வேறு தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆண்டுதோறும் தியோதர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல், தொடரில் அசத்திய பல இளம் வீரர்கள் இந்த தொடரில் ஆடி வருகின்றனர்.


மிரட்டும் சாய்சுதர்சன்:


கடந்த ஐ.பி.எல். தொடரில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்களில் சாய் சுதர்சன் குறிப்பிடத்தக்கவர். தெற்கு மண்டல அணிக்காக ஆடி வரும் சாய் சுதர்சன் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோதி வருகின்றனர்.




தெற்கு மண்டல அணிக்காக கடந்த 2 போட்டிகளில் மட்டுமே சாய் சுதர்சன் களமிறங்கினார். அதில், கிழக்கு மண்டல அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 53 ரன்களை விளாசினார். 50 ஓவர்கள் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் நேற்று முன்தினம் மத்திய மண்டல அணிக்கு எதிராக தெற்கு மண்டல அணி ஆடியது. அதில் முதலில் ஆடிய மத்திய மண்டல அணி யஷ்துபேவின் பொறுப்பான பேட்டிங்கால் 261 ரன்களை விளாசியது.


262 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தெற்கு மண்டல அணியின் கேப்டன் எந்த பந்தையும் சந்திக்காமலே ரிட்டையர்ட் ஹர்ட் ஆக, தொடக்க வீரர் ரோகனுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். 24 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெகதீசன் 19 ரன்களுக்கு அவுட்டாக ரோகித் ராயுடு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்தார்.


அசத்தல் சதம்:


சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சாய்சுதர்சன் தனி ஆளாக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ரோகித் 37 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்துவந்த வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து சாய் சுதர்சன் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிதானமும், ஏதுவான பந்துகளை விளாசியும் விளையாடி சாய் சுதர்சனால் தெற்கு மண்டலம் இலக்கை நோக்கி முன்னேறியது.


அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். சதத்தை கடந்த பிறகும் அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைப்பதே இலக்கு என்பது போல பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் தெற்கு மண்டல அணியை வெற்றி பெற வைத்தார். அவர் ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 132 ரன்கள் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் எடுத்தார்.


ரசிகர்கள் நம்பிக்கை:




சாய் சுதர்சன் இந்த தொடர் மட்டுமின்றி சமீபத்தில் இந்திய ஏ அணிக்காக ஆடிய தொடரிலும் சிறப்பாக ஆடினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னை திரும்பி பார்க்கச் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய்சுதர்சன் விரைவில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


மேலும் படிக்க: உதிக்கிறது புதிய படை.. இந்திய அணியின் இளம் ரத்தங்கள்..! நட்சத்திரமாக ஜொலிப்பார்களா இளஞ்சிங்கங்கள்...?


மேலும் படிக்க: Watch Video: ’அண்ணன் வரார் வழிவிடு’.. மீண்டும் பயிற்சியில் பட்டையகிளப்ப தொடங்கிய கே.எல்.ராகுல்.. வைரலாகும் வீடியோ!