இந்திய அணியின் ஜாம்பவனாக திகழும் விராட்கோலி, ரோகித்சர்மா, ரஹானே, புஜாரா, புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோர் தங்களது கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பது அவர்களின் வயதை கணக்கில் கொண்டால் நமக்கு புரியும்.


புதிய இந்திய அணி:


இதனால், அவர்களை போலவே அவர்களுக்கு நிகரான புதிய வீரர்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை பி.சி.சி.ஐ. உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, சமீபகாலமாக இந்திய அணி ஆடும் தொடர்களில் இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரே மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.




வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டி தவிர ஏனைய 2 போட்டிகளிலும் விராட்கோலி மற்றும் ரோகித்சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இஷான்கிஷான், சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தனர்.


இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:


இதன் தொடர்ச்சியாக தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக ஆட உள்ள 3 டி20 போட்டிகளிலும் பும்ரா தலைமையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பல இளம் வீரர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி தாங்கள் இந்திய அணிக்கு வர தயாராக உள்ளோம் என்பதை பறைசாற்றினார்கள்.


அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக்வர்மா, ரிங்குசிங், சாம்சன், ஜிதேஷ்சர்மா, ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய், முகேஷ்குமார், பிரசித்கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார், ஆவேஷ்கான் ஆகியோருக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கியுள்ளது.




வாய்ப்பை பயன்படுத்துவார்களா..?


இதில் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் ஆடிய அனுபவம் கொண்டவர் பும்ரா மட்டுமே. மற்ற அனைத்து வீரர்களுக்கும் பெரியளவில் இந்திய அணியில் ஆடிய அனுபவம் கிடையாது. இதனால், இந்திய ரசிகர்கள் எதிர்கால இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.


குறிப்பாக, ஐ.பி.எல். மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்குசிங், துபே, ஜிதேஷ்சர்மா ஆகியோரின் பேட்டிங் மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.




இந்திய அணியின் பந்துவீச்சு   சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாத நிலையில், அடுத்த தலைமுறை பந்துவீச்சாளர்களை கட்டமைக்கும் நோக்கில் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஆவேஷ்கான், பிஷ்னோய், ஷபாஸ் அகமதுவிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறந்த ஃபினிஷராக அசத்திய ரிங்குசிங் இந்திய அணிக்கும் புதிய ஃபினிஷராக உருவெடுப்பாரா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


ரசிகர்கள் எதிர்பார்ப்பு:


இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது எவ்வளது அரிதானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில், புதிய தலைமுறை இந்திய அணியை கட்டமைக்க பல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.


வெறும் 3 டி20 போட்டிகள்தான் என்றாலும் அணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலான வீரர்களுக்கு ஆடும் லெவனில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனால், தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுப்பார்களா? என்பது அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் தெரிய வரும்.