ICC Test Ranking : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. இந்தநிலையில், இந்த தொடருக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அனைத்து போட்டிகளில் விலகி இருக்கும் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், பந்துவீச்சு பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 


ஆஷஸ் தொடரின் சிறப்பாக செயல்பட்ட ஜோ ரூட் 859 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆஷஸ் தொடருக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் 842 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தில் உள்ளார். தொடர் தொடங்கும் முன் முதல் இடத்தில் இருந்த லாபுஷேன் தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளார். அதேபோல், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இரண்டு இடங்களை இழந்து ஆறாவது இடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 759 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.






பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா இரண்டாவது இடத்திலும், ஜடேஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்க்கையை நான்காவது இடத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். ஒரு வருடம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 10வது இடத்தில் உள்ளார்.


ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடம்: 


ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஜடேஜா 455 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 370 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். வங்கதேச நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல், இந்தியாவின் மற்றொரு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் 298 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். 


மேலும், அணிகள் தரவரிசையில் இந்தியா 118 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் 118 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அது இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 115 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.