இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை. இந்தநிலையில், கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து மீண்டதாக செய்திகள் வந்தநிலையில், விரைவில் இந்திய அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு காயத்தில் இருந்து குணமடைந்த ராகுல், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். மேலும், அவர் பேட்டிங்குடன் விக்கெட் கீப்பிங்கை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கே.எல். ராகுல் தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடைசியாக கே.எல்.ராகுல் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை மற்றும் ஆசியக்கோப்பையில் ராகுல் விளையாட வாய்ப்பா..?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பருக்கான தேடலில் ஈடுபட்டு வருகிறது. அனுபவ வீரர் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எஸ்.பரத் என அனைவரையும் முயற்சித்து வருகிறது. மேலும், அயர்லாந்து டி20 தொடருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவை முயற்சி செய்ய இருக்கிறது. இருப்பினும், வருகின்ற ஆசியக்கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் அதற்கான பதில் கேள்விகுறியாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கே.எல். ராகுல் இந்திய அணிக்கு திரும்பினால் பலமாகவே பார்க்கப்படும்.
இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா:
இந்தியா - அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி அணிக்கு கேப்டனாக இருக்கும் அதே வேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் போன்றவர்கள் தொடரை இழக்க நேரிடும். இருவரும் தேர்வு செய்யப்படாததால், இன்னும் கிரிக்கெட் விளையாடுவதற்கு போதுமான தகுதி பெறவில்லை என்று தெரிகிறது.
கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உள்ளனர். அங்கு அவர்கள் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தேவையான உடற்தகுதியை பெற பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இருவரும் ஆசிய கோப்பைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். கே.எல். ராகுல் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக இருக்கிறார் என்பது மறுக்கப்படாத உண்மை.