உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. மிக வலுவான பேட்டிங் வரிசையும், சிறப்பான பந்துவீச்சு பலத்தையும் கொண்ட இந்திய அணி எந்தவித போராட்டமும் இல்லாமல் சரண் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இந்த தோல்விக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட்கோலி, “ உண்மையை கூற வேண்டுமென்றால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே துணிச்சலான முயற்சிகளை எடுக்கத் தவறிவிட்டோம். பந்துவீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேன் பெரிய வாய்ப்பு கொடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் மைதானத்தில் களமிறங்கும்போது எங்கள் உடல்மொழி சரியாக இல்லை.


எப்போது எல்லாம் அடித்து ஆட முயற்சி செய்தோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டை இழந்தோம். அடிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலே வீரர்கள் இருந்ததாலேயே இது நடந்தது என நினைக்கிறேன். இந்தியாவிற்காக ஆடும்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உண்மையே. நாங்கள்ஆடும் போட்டிகளை பல கோ பேர் பார்க்கின்றனர். பலரும் மைதானத்திற்கு வருகின்றனர்.


இந்தியாவுக்காக ஆடுபவர்கள் அதை அனுபவித்து அதிலிருந்து உத்வேகம் பெற்று விளையாட வேண்டும். இந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் அதை செய்யவில்லை. அதனால்தான் தோற்றோம். பாசிட்டிவாக தைரியமாக சில விஷயங்களை நாங்கள் செய்திருக்க வேண்டும். வெளியில் இருக்கும் அழுத்தங்களை புறந்தள்ளி பாசிட்டிவான கிரிக்கெட் ஆடியிருக்க வேண்டும்.”


இவ்வாறு அவர் கூறினார்.




துபாய் மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும், போட்டிக்கு முன்பு டாஸ் தோற்றபோதே இந்திய வீரர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டது போலவே பேட்டிங் செய்தனர். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அதிரடி ஆட்டம்தான் கைகொடுக்கும் என்ற நிலையில், இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளவே ஆடினர்.


இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு உதாரணமாக 5.1 ஓவருக்கு பிறகு 17வது ஓவரில்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தனர். ஆட்டத்திலே மொத்தமாக 2 சிக்ஸர்கள்தான் அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற இஷான்கிஷான் அதிரடியைத் தொடங்கும் முன்னரே வெளியேறினார். ரோகித்சர்மா, விராட்கோலி சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை தூக்கியடிக்கவே மிகவும் தயங்கினர். இது வெளிப்படையாகவே இந்த போட்டியில் தெரிந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண