டி20 உலகக் கோப்பையின் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்று கடினமாகியுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே இரண்டு மோசமான தோல்விகளால் இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி இனிமேல் தகுதி பெறுவதிலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக முறை இந்திய அணியை வீழ்த்திய அணி என்ற சாதனையை நியூசிலாந்து சமன் செய்துள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை அதிக முறை தோற்கடித்த அணிகள் யார் யார்?
இலங்கை(2):
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இலங்கை அணியும் 2 முறை வீழ்த்தியுள்ளது. அதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து முதல் முறையாக டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 பிரிவில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. அதில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்(3):
டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் அணி தான். வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. அதற்கு பின்னர் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் இரண்டாவது முறையாக கோப்பையையும் வென்றது.
நியூசிலாந்து (3):
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 2 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியாவை வென்றது. அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 79 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து மகத்தான வெற்றியை பெற்றது.
அதன்பின்னர் நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 20 ஓவர்களில் வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணியிடம் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்தியாவை 2 முறைக்கு மேல் தோற்கடித்த இரண்டாவது அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து படைத்துள்ளது. ஏற்கெனவே இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தோற்கடித்தது. தற்போது அதை தொடர்ந்து நியூசிலாந்து அணியும் இந்தியாவை தோற்கடித்து ஒரு சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க: பேட்டிங்கில் துணிச்சல் இல்லை... வீரர்களிடம் உற்சாகம் இல்லை - இந்திய கேப்டன் விராட்கோலி வேதனை