எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும்.


புஜாரா:


இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.


வயது என்பது வெறும் எண்:


புஜாரா தன்னால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ என்னைப் பொறுத்தவரை வயது என்பதை ஒரு எண்ணாகவே கருதுகிறேன். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால், இப்போது வரை இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் அவர். ஜோகோவிச் சமீபத்தில் 35 என்பது புதிய 25 என்றார்.


நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் எனது உடலை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செ ்ய வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது தாக்குதல் ஆட்டம் ஆடுகிறது. ஆனால், அது அனைத்து மைதானங்களிலும் கிடையாது. டியூக்ஸ் பந்துகளில் அதேபோல நகர்வுகள் கிடையாது.


வெற்றியே முக்கியம்:


முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் என்பது கடினம். தற்போது கிரிக்கெட் மாறுகிறது. ஏராளமான ஷாட்கள் ஆடுகிறார்கள். மைதானங்கள் தற்போது அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், உங்களால் அதை தென்னாப்பிரிக்காவில் செய்ய முடியாது.


நான் என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், அது எப்படி அணிக்கு உதவ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அடுத்து பேட் செய்ய வருபவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். நான் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால் அது அணிக்கு உதவும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நன்றாக ஆடுவதை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் நேர்மறையுடன் ஆடி அணியை வெற்றி பெற வைத்தால் அது அணிக்கு நல்லது. விளையாடுவதற்கு பல வழிகள் உள்ளது.”


இவ்வாறு அவர் கூறினார்.


தற்போது புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வரும் புஜாரா தற்போது நடந்து வரும் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 673 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்ததும் அடங்கும். புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 390 ரன்கள் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: Imran Tahir: 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்.. வயது தடையல்ல என நிரூபித்த இம்ரான் தாஹிர்!


மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்!