இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை போல, வங்கதேசத்திலும் வங்கதேச பிரிமீயர் லீக் ஆண்டுதோறும் நடைபெறும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்காக வங்கதேச பிரிமீயர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் காரணமாக இம்ரான் தாஹிர் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இம்ரான் தாஹிர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 44 வயதான இம்ரான் தாஹிர் தனது வயது காரணமாக விவாதப் பொருளாகவே இருந்து வருகிறார். பங்கேற்கும் அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் இம்ரான் தாஹிர் சிறப்பாக செயல்பட்டாலும், ஏலத்தின்போது ஒவ்வொரு அணி நிர்வாகமும் இவரை எடுக்க ஒரு நொடி யோசிக்கதான் செய்கிறது.
இப்படியாக சூழ்நிலையில், இம்ரான் தாஹிர் இந்த வயதில் சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
500 விக்கெட்கள்:
வங்கதேச பிரிமீயர் லீக்கின் நேற்றைய போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். ஆரம்பம் முதல் அட்டகாசமாக பந்துவீசி, அலெக்ஸ் ஹேல்ஸ், அன்முல் ஹக், அபிஃப் ஹொசைன், ஹபிபுர் ரெஹ்மான் சோஹன், அக்பர் அலி ஆகியோரை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 டி20 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். தற்போது, இம்ரான் தாஹிர் 404 டி20 போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்
டுவைன் பிராவோ - 624 விக்கெட்டுகள்
ரஷித் கான் - 556 விக்கெட்கள்
சுனில் நரைன் - 532 விக்கெட்கள்
இம்ரான் தாஹிர் - 502 விக்கெட்டுகள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ டி20 வடிவத்தில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மற்றொரு பந்துவீச்சாளரான சுனில் நரைன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் தற்போது இம்ரான் தாஹிரின் பெயர் சேர்ந்துள்ளது. இதுவரை, டி20 போட்டிகளில் டுவைன் பிராவோ 624 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் டி20 போட்டிகளில் 556 விக்கெட்டுகளையும், சுனில் நரேன் 532 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இம்ரான் தாஹிரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இம்ரான் தாஹிர், தென்னாப்பிரிக்கா அணிக்காக இதுவரை 20 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 38 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது தவிர, இம்ரான் தாஹிர் ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இம்ரான் தாஹிர் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லில் 51 போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் 20.77 சராசரியிலும், 7.76 பொருளாதாரத்திலும் 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இம்ரான் தாஹிரின் சிறந்த பந்துவீச்சாகும்.