இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி வருகின்ற பிப்ரவரி 15 (நாளை) முதல் தொடங்குகிறது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரில் இரண்டு சிறப்பான சாதனைகளை படைக்க இருக்கிறார். முதலாவதாக, மூன்றாவது டெஸ்டில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். இது தவிர சொந்த மண்ணில் அஸ்வின் மேலும் தனது பெயரில் இன்னொரு சிறப்பான சாதனையை படைக்கவுள்ளார்.
அதாவது, சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவிசந்திரன் அஸ்வின் படைக்கவுள்ளார். தற்போது இந்த பட்டியலில் முன்னாள் இந்திய வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் கும்ப்ளே மொத்தம் இதுவரை 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். ரவிசந்திரன் அஸ்வின் 346 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ராஜ்கோட்டில் நடக்கும் டெஸ்டில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்தவர்:
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் கைப்பற்றிய விக்கெட்கள் 97 ஆகும். இதற்கு முன்பு, இந்த சாதனையை ஜாம்பவான் இடது கை சுழற்பந்துவீச்சாளரான பகவத் சந்திரசேகர் தன்வசம் வைத்திருந்தார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து எதிராக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வினுக்கும், சந்திரசேகருக்கும் அடுத்தபடியாக அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகளுடனும், பிஷன்சிங் பேடி/ கபில்தேவ் 85 விக்கெட்டுகளுடனும், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்:
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை (இரு இன்னிங்சிலும் தலா 3 விக்கெட்கள்) வீழ்த்தினார். இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.