வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


வெஸ்ட் இண்டீஸ் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பர்படாஸில் உள்ள  கென்சிங்டன் ஓவல் மைதானத்தில்  நேற்று நடைபெற்றது. 


ந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் களமிறங்கினர். இந்த போட்டியில் சில  தினங்களுக்கு முன்பு மரணமடைந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரபிக் ஜூமாதீனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.


இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் சாய் ஹோப் மட்டுமே நம்பிக்கையளிக்கும்படி விளையாடி 43 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்கள் மட்டுமே விளையாடி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் மட்டும் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 


இதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி பேட் செய்தாலும் இந்திய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறவே செய்தது. சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்ட்யா 5, ரவிந்திர ஜடேஜா 16, ஷர்துல் தாகூர் 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாயினர். ஆனால் மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடிக்க இந்திய அணி வெற்றி எளிதானது. 22.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.


இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி நாளை இதே மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. 


வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறைந்த ஸ்கோர்



  • இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்திய அணிக்கு எதிராக அந்த அணியின் குறைந்த ஸ்கோர் ஆகும். முன்னதாக 2018 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தது. 

  • இந்திய அணி பேட்டிங் செய்கையில் வழக்கத்திற்கு மாறாக, மாற்று வரிசையில் வீரர்கள் களம் கண்டனர். அதேபோல் இந்திய அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  ஒரு ஆட்டத்தில் இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் 7 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். 


மேலும் படிக்க: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!


சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!