DD Returns Movie Review in Tamil:பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாகும். இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். 


படத்தின் கதை 


முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள். 


இதனிடையே நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது. மறுபுறம் சுரபியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது. அவரும் சுரபியை மீட்கிறார். 


இதற்கிடையில் போலீஸூக்கு பயந்து மீதமுள்ள பணம், நகைகளை சந்தானத்தின் நண்பர்களான மாறன், சைதை சேது இருவரும் அந்த பங்களாவில் கொண்டு போய் வைக்கின்றனர். பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி வென்றால் பணம்.. இல்லையெனில் மரணம் என நிலை இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள். 


நடிப்பு எப்படி? 


ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் என்பதால் அதில் அசால்டாக வெற்றி பெற்றுள்ளார்கள். சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் கவர்கிறார். சுரபிக்கு பெரிய அளவில் படத்தில் வேலையில்லை என்றாலும் கதையின் போக்குக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார். 


தியேட்டருக்கு சென்று பார்க்கலாமா?


பேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடி தான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள். பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்கள். 


பயமுறுத்தும் பேய் என சென்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்றாலும் , காமெடி காட்சிகளுக்கு சிறப்பாக பயன்பட்டிருக்கும். 90ஸ் கிட்ஸின் பேவரைட் நிகழ்ச்சியாக “Takeshi's Castle" நிகழ்ச்சியிலான விளையாட்டு உள்ளிட்டவை கவர்கிறது. படத்திற்கு பாடல்களே தேவையில்லை. பின்னணி இசை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.