LGM Movie Review in Tamil: கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம் “எல்.ஜி.எம்” (Lets Get Married) இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.ஜி.எம் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளா ரமேஷ் தமிழ்மணி. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் கதை
இந்த படத்தின் கதை ஒருபக்கம் யோசித்து பார்த்தால் இதெல்லாம் எங்க நடக்கும் என நினைக்க வைக்கும். இன்னொரு பக்கம் இப்படியெல்லாம் நடந்தா நல்லாருக்கும்ல என ஏங்க வைக்கும் அளவுக்கு லாஜிக் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அது இல்லவே இல்லை..!
இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்பா இல்லாமல் தனியாளாக ஹரிஷ் கல்யாணை வளர்க்கும் அம்மா நதியாவோ எதிர்ப்பே இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் திருமண சம்பந்தம் பேச போன இடத்தில், ஒரு பிரச்சினை. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்ய அதை ஹரிஷ் கல்யாண் செயல்படுத்துகிறார். இந்த ட்ரிப் ஒர்க் அவுட் ஆனதா.. மாமியார் நதியாவுடன் மருமகள் இவனா ஒன்று சேர்ந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
நடிப்பு எப்படி?
நடிப்பில் குறை வைக்காத அளவுக்கு நடித்திருந்தாலும் படத்தில் யாருடைய நடிப்பும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. முக்கால்வாசி படம் இவானா, நதியாவை சுற்றுவதால் ஹரிஷ் கல்யாண் இரண்டாம் பாதியில் சிறப்பு தோற்றத்தில் வருவது போல நினைக்க வைக்கிறது. இவானா இன்னும் 2 படங்கள் நடித்தாலும் நமக்கு “லவ் டுடே” படத்தின் நிகிதா கேரக்டர் தான் கண்முன் வந்து போகிறது. நதியா முதல் பாதியில் வயதான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் காட்சியளிக்கிறார் (வயசே ஆகாது போல..!). இதேபோல் யோகிபாபுவின் காமெடி நன்றாகவே வேலை செய்துள்ளது.
படத்தின் நிறை குறை என்ன?
அடிப்படையில் எல்.ஜி.எம் படத்தின் கதை இன்றைக்கு சர்வ சாதாரணமாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் பயம் கொள்ளும் ஒருவித பிரச்சினையைத் தான் கொண்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் இதைத்தான் சொல்லி பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முதல் பாதி ரசிக்க வைத்த நிலையில் இரண்டாம் பாதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை மொத்தமாக கதையின் போக்கையே மாற்றிவிட்டு ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது. காட்சிகளில் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. காதல்,சென்டிமென்ட் போன்றவை ரசிகர்களுக்கு மனநிறைவை தரவில்லையோ என தோன்றுகிறது. பாடல்களும் ஒன்றவே இல்லை.
ஆக மொத்தத்தில் எல்.ஜி.எம் படம் ஏமாற்றம்..!