IND vs WI 1st ODI: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அணியின் கேப்டன் ஹோப் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி சார்பில் குப்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே டெஸ் தொடரை இழந்து விட்டதால், ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 7 ரன்களில் இழந்தது. அதன் பின்னர் 45வது ரன்னில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது விக்கெட்டை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் மிகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளூர்களில் கிரிக்கெட் விளையாடத்தெரியாதவர்கள் விளையாடினால் எப்படி விளையாடுவார்களோ அப்படி விளையாடினர். இதனால் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவது சவாலானதாக அமையவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான பேட்டிங் இதுதான். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 2004ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் அந்த போட்டியை விடவும் இந்த போட்டியில் ரன் அதிகமாக இருந்தாலும், பேட்டிங் தரம் என்பது மிகவும் மோசம்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்திய அணியின் கேப்டனும் முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களை அவர்களின் போக்கிலேயே பந்து வீச அனுமதித்தார். அவர்கள் கூறிய அனைத்து இடத்திலும் சந்தேகமே இல்லாமல் ஃபீல்டர்களை நிறுத்தினார். இதனால் இந்திய அணி சார்பில் பந்துவீசிய அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் (உம்ரான் மாலீக் தவிர) விக்கெட்டுகள் தங்கள் வசம் சேர்த்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு சர்வதேச அளவில் இந்த போட்டி அறிமுகப் போட்டி ஆகும்.
சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் அள்ளினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் போட்டியை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணிக்கு ஒருநாள் போட்டித் தொடர் கடினமாக இருக்காது எனவும் இப்போதே கோப்பையில் இந்தியாவின் பெயரை எழுதலாம் எனவும் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.