உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது அபார சதத்தால் 469 ரன்களை குவித்தது.


சொதப்பும் ஹிட்மேன்:


இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியை போல வலுவான ரன்களை முதல் இன்னிங்சில் குவிக்க இந்திய அணிக்காக கேப்டன் ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி களமிறங்கியது. மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்து வேகத்தில் மிரட்டினர். கேப்டன் ரோகித்சர்மா இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில் 26 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானார்.


ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திய ரோகித்சர்மா இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக 15 ரன்களில் ரோகித்சர்மா அவுட்டானார்.


ரோகித்சர்மா கடைசி 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக ரோகித்சர்மா விளையாடிய 20 இன்னிங்சில் 2 அரைசதம், 2 சதங்கள் மட்டுமே விளாசியுள்ளார். மற்ற இன்னிங்சில் அவரது திறமைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.


கடைசி 6 இன்னிங்சில் ரோகித்சர்மா எடுத்த ரன்கள்:


32, 21, 12, 12, 35 மற்றும் 15 ரன்கள்


கடைசி 20 இன்னிங்சில் எடுத்த ரன்கள்:


49, 34, 30, 36, 12, 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 21, 12, 12, 35 மற்றும் 15


தொடர்ந்து சொதப்பலான பேட்டிங்கையே ரோகித்சர்மா வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் முதல் இன்னிங்சில் சொதப்பியது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவே உள்ளது. தற்போது இந்திய அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. களத்தில் விராட்கோலி – புஜாரா ஆடி வருகின்றனர். 2வது இன்னிங்சில் ரோகித்சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  


36 வயதான ரோகித்சர்மா இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 394 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் விளாசியுள்ளார்.


மேலும், ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் டி20, சாம்பியன்ஸ்டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி என 7 இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால், இதில் எந்த ஒரு இறுதிப்போட்டியிலும் ரோகித்சர்மா அரைசதம் கூட விளாசியதில்லை. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டு இன்னிங்சிலும் 34 மற்றும் 30 ரன்களே எடுத்தார்.


மேலும் படிக்க: Rohit WTC Final: என்ன செஞ்சு இருக்கிங்க ரோகித் சர்மா? ரவுண்டு கட்டி விளாசும் மூத்த வீரர்கள்.. நடந்தது என்ன?


மேலும் படிக்க: WTC Final 2023: இறுதிப் போட்டியில் உலக சாதனை.. அடுத்தடுத்து இருவர் அசத்தல் சதம்..!